உலகையே உலுக்கி வரும் கோவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா பலரையும் தாக்கி வருகிறது. இதில் சாமானிய மக்கள் முதல் பெரும் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் சராசரியாக 4000 க்கு மேற்பட்ட கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், தமிழ் சினிமா துறையில் மற்றொரு திறமை வாய்ந்த நடிகரை காவு வாங்கியுள்ளது. இதனால் ரசிகர்களும் சினிமா துறையினரும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
பல சினிமா கலைஞர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கடந்த வாரம் துணை நடிகர் பிலோரென்ட். சி. பெரேரா என்பவரை நாம் இழந்ததை அடுத்து மற்றொரு துணை நடிகரையும் இழந்திருக்கிறோம். தமிழ் சினிமாவின் நடிகர் மற்றும் கதை எழுத்தாளருமான “ரூபன் ஜே” தான் தற்பொழுது கொரோனாவுக்கு இரையானது.
விஜய் நடித்த கில்லி விக்ரம் நடித்த தில், தூள் போன்ற திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் மக்களின் மனதில் நிலைத்து நிற்கும் படி தன் திறமையை வெளிப்படுத்திய ரூபன் ஜே, “இருமுகன்” படத்திற்கான திரைக்கதையும் எழுதி உள்ளார். அது மட்டுமின்றி விரைவில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார்.
திருச்சியை சேர்ந்த 54 வயதான இவர் ஒரு மாதத்திற்கு முன்னரே நுரையீரல் பாதிப்பு காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் அதற்குத்தகுந்த சிகிச்சையை அளித்து வந்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட ரூபென் அவர்கள் செப்டம்பர் மாதம் 21 மாலை 4 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தார். இவருக்கு ரசிகர்களும் சினிமா கலைஞர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பின்னணி பாடகரான எஸ் பி பி அவர்கள் கொரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.