2000-களில் சின்னத்திரை வெள்ளித்திரை என அனைத்திலும் கலக்கி வந்தவர் நடிகர் ராகவ். பலரின் மனதில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் பதிந்த இந்த ராகவ்வை சீரியல் ரசிகர்கள் யாராலும் மறக்கவே முடியாது. நீண்ட நாட்களாக திரையில் தோன்றாத ராகவ் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் கம் பேக் கொடுக்கவுள்ளார்.
ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வெற்றித் தொடர் “அண்ணி” சீரியல் மூலம் திரையில் அறிமுகமான ராகவ், சன் டிவியில் ஒளிபரப்பான “அலைகள்” தொடரிலும் துணை கதாபாத்திரமாக நடித்தார். சினிமாக்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்கள் நடித்து வந்த ராகவிற்கு விஜய் தொலைக்காட்சியின் ஜோடி No.1 நிகழ்ச்சி அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் “டான்ஸ் ஜோடி டான்ஸ்” உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள ராகவ் 2011-ம் ஆண்டு அவரே தயாரித்து, இசையமைத்து, நடித்து “நஞ்சுபுரம்” என்ற திகில் படத்தை வெளியிட்டார். அத்திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் “டிக்கெட்” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து தன் மனைவியின் தயாரிப்பில் 2017-ம் ஆண்டு வெளியிட்டார்
தன்னுடன் பல நடன நிகழ்ச்சிகளில் ஜோடியாக ஆடிய தொகுப்பாளர் ப்ரீத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ராகவ். சித்தி பாசமலர் போன்ற பல வெற்றி சீரியல்களில் நடித்துள்ள ப்ரீத்தா தன் கணவருடன் சேர்த்து கலைஞர் தொலைக்காட்சியில் அரசி என்ற சீரியலிலும் ஏய் நீ ரொம்ப அழகா இருக்க திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
2015-ற்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் பெரிதளவில் தோன்றாத ராகவ் ஜீ தமிழின் பிரபல நெடுந்தொடரான செம்பருத்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகி வருகிறது. அவரது மனைவியும் 2014-ம் ஆண்டிற்கு பின்பு திரையில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.